நீர் மாசால் புற்று நோய் தலைநகரமாகி வரும் ஈரோடு

‘பத்து வருஷத்துக்கு முன்னாடி, பொன்னு விளையுற பூமிங்க இது.இன்னைக்கு நிலத்தடி நீர், மண் வளம் இப்படி பலவற்றையும் பலி கொடுத்துட்டு,நிக்குறோம்ங்க. கடைசியா மனித உயிர்களையும் காவு வாங்கிக்கிட்டு இருக்குறது தாங்க,எங்க வேதனையின் உச்சகட்டம்’ என்கின்றனர் விவசாயிகள்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ‘சிப்காட்’ தொழிற்பேட்டையை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் ஒவ்வொருவர் நிலைமையும், இப்படித்தான் இருக்கிறது. சாயம், தோல் கழிவுகளை நீர்நிலைகளிலும், பூமிக்குள்ளும் கலப்பதால், ‘தமிழகத்தில் புற்றுநோயின் தலைநகரமாக’ ஈரோடு மாறி வருகிறது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான, ‘சிப்காட்’ அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பு, 2,500 ஏக்கர். இங்கு, 300க்கும் மேற்பட்ட தோல், சாய, டயர் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

Courtesy: Dinamalar

உயர் நீதிமன்றம் இதுபோன்ற தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும், சாய, தோல் கழிவுநீரை சுத்திகரித்து, முற்றிலும் நச்சுத்தன்மையற்றதாக மாற்றிய பின்னரே நிலத்தில் விட வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு தொழிற்சாலையும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்ததாக தெரியவில்லை.

அப்படியே அமைத்திருந்தாலும், அவை வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன. இதில் ஒரு சில தொழிற்சாலைகள், ஒரு படி மேல் போய் சாய, தோல் கழிவுகளை, ‘போர்வெல்’கள் அமைத்து பூமிக்குள் நேரடியாக விடுகின்றன.

விளைவு, சுற்றுச்சூழல் மட்டுமல்ல, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 15 கி.மீ.,க்கு எந்த ஒரு விவசாயமும் இல்லை. சாய, தோல்கழிவுநீரை சுத்திகரிக்காமல், சிப்காட் அருகிலுள்ள ஓடையகாட்டூர் குளத்தில் விட்டதால், 18 ஏக்கர் பரப்புள்ள குளத்தில், 5 அடி உயரத்துக்கு, நச்சுத்தன்மையுடைய திடக்கழிவுகள் தேங்கியுள்ளன.

Courtesy: Dinamalar

குளத்துக்கு அருகில், 80 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை விடுவதாக தொழிற்சாலைகள் தெரிவித்தாலும், உண்மையில் அந்த இடம் மேடான பகுதி என்பதால், கழிவுநீர் அனைத்தும் குளத்துக்கே வந்து விடுகின்றன.சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், போர்வெல் மூலம் பூமிக்குள் விடப்படுவதால் நீர் மாசடைகிறது. இதனால், சிப்காட்டிலிருந்து, 1 கி.மீ., சுற்றளவில் உள்ள விவசாய கிணறுகளில் நீர் இருந்தும், பயன்படுத்த முடியாத நிலைஉள்ளது.

சாய, தோல் கழிவுநீரால் சிப்காட்டை சுற்றியுள்ள வரப்பாளையம், வாய்பாடி, கூத்தப்பாளையம், சிறுகளஞ்சி, பனியம்பள்ளி, ஈஞ்சூர், பாலத்தொழுவு, வரகாட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பதும், பலர் உயிர் இழந்திருப்பதாகவும் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஈரோட்டை சேர்ந்த தனியார் மருத்துவமனை சார்பில், இங்கு புற்றுநோய் குறித்த ஆய்வு முகாம் நடந்தது. முகாமில், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில், 400 பெண்களிடம் நடத்தப்பட்ட மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையில், 14 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதவிர, வயிறு, உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம்.

Courtesy: Dinamalar

பெயர் வெளியிட விரும்பாத டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘புற்றுநோய் ஏற்பட உணவு பழக்கவழக்கம், புகை பிடித்தல், மதுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் ஆகிய ஐந்து காரணங்கள் பொதுவானவை. ஈரோடு மாவட்டத்தில் ஆறாவது காரணியாக தண்ணீரால், புற்றுநோய் ஏற்படுகிறது.

‘தொழிற்சாலை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல், குளங்கள், ஆறு, போர்வெல்களில் விடப்படுகின்றன. இதனால், நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபடுகிறது. மனிதர்கள் குடிக்கும் நீரில், கரைந்திருக்கும் உப்பின் அளவு, டோட்டல் டிசால்வ்டு சால்ட் – டி.டி.எஸ்., 600 வரைஇருக்கலாம்.

‘கடந்த, ஆறு ஆண்டுகளில், ஈரோட்டின் நீர் நிலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது, 15 ஆயிரம் டி.டி.எஸ்., என்றளவில் உள்ளது. தவிர, கால்சியம், காரீயம், மெத்திலின், போரேட், போரோட் சல்பான், ஈத்தேன், என்டோசல்பான் சல்பேட் என, பல வேதிப்பொருட்கள், 30 முதல், 100 மடங்கு அதிகம் உள்ளன. இவை, புற்றுநோய் உட்பட பல கொடிய நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை’ என்றார்.

நன்றி: தினமலர்

வளர்ச்சி என்றால் என்ன?

பொன் விளையும் பூமியில் சாய தோல் பட்டறைகளை விட்டு நீர் மாசாக்கி கடைசியில் உயிரையே வாங்குவதா வளர்ச்சி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *